மேகதாது அணை விவகாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை - பசவராஜ் பொம்மை பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மேகதாது அணை விவகாரம்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரித்து கர்நாடக அரசு, மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்கத்துடனும் அணைகட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கர்நாடகம் தெரிவித்துள்ளது.
ஆனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதே நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ளதால், மேகதாதுவில அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த தென்மாநிலங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய ஜல்சக்தி துறை மந்திரியான கஜேந்தரசிங் ஷெகாவத், மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் கர்நாடகம்-தமிழ்நாடு அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
மத்திய மந்திரியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உப்பள்ளி விமான நிலையத்தில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனுமதி வழங்க கோரிக்கை
மேகதாதுவில் அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகம் இடையே மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே மேகதாதுவில் அணை பற்றிய முக்கிய பயன்பாடுகள் குறித்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்தரசிங் ஷெகாவத்திற்கு விரிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு, டெல்லிக்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன். அங்கு மேகதாது, கிருஷ்ணா உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து மத்திய ஜல்சக்தி மந்திரி, பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லி செல்லும் போதும் அதுபற்றி மீண்டும் பேசப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.