சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13-வது மாநாடு பெரம்பலூரில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெரியசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு, பொருளாளர் மணிமேகலை ஆகியோர் வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர்.
மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் துறைவாரியான சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக மணிமேகலை, மாவட்ட செயலாளராக கொளஞ்சிவாசு, பொருளாளராக மருதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். கல்வித்தகுதி உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணி பதவி உயர்வு வழங்க வேண்டும். கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். காலாவதியான பச்சைபயறு, கொண்டைக்கடலை, எண்ணெய் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவேண்டும். தூத்துக்குடியில் இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளான பேர் கலந்து கொள்வது. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.