கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி

பழவூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர்-மகன் காயம் அடைந்தனர்.;

Update: 2022-03-06 20:36 GMT
வடக்கன்குளம்:
பழவூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர்-மகன் காயம் அடைந்தனர்.

அணுமின் நிலைய ஊழியர்

ஆந்திர மாநிலம் லிச்சு பேட்டாவை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 50). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சீனிவாசராவ் தனது மனைவி கவிதா (40), மகன் பினர்ஜி (4) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் அஞ்சு கிராமம் புறப்பட்டனர். 
பழவூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் விலக்கில் இருந்து சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பெண் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சீனிவாசராவ், கவிதா, பினர்ஜி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார். சீனிவாசராவ், பினர்ஜி ஆகியோர் காயம் அடைந்தனர். இதற்கிடையே காரை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து உடனடியாக பழவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான கவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்