மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் வடக்குத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். நாயகனைப்பிரியாள் காலனி தெரு அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், துரைசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மயக்கமடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு துரைசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி வெண்ணிலா தா.பழூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.