அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

நெ.1 ேடால்கேட் அருகே ஏற்பட்ட விபத்தில் அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2022-03-06 20:28 GMT
கொள்ளிடம் டோல்கேட்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வெற்றிவேல்(வயது 28). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கரண் (18), முரளி(17) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கரண் ஓட்ட, மற்ற இரண்டு பேரும் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தனர். 
நெ.1 டோல்கேட் அருகே பழூர் என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், வெற்றிவேல் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கியதால் டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், விபத்தில் பலியான வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, நெய்தலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்