எஸ்.டி.பி.ஐ. பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் சாலை மறியல்

சங்கரன்கோவில், கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-06 20:18 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில், கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

சென்னை அருகே உள்ள தாம்பரத்திலும், சேலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தும் அணிவகுப்பு, பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதேபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சங்கரன்கோவில் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நிஜார் முகைதீன், 20-வது வார்டு நகரசபை உறுப்பினர் சேக் முகம்மது ஆகியோர் தலைமையில் சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாசல் முன்பு திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாலைமறியல் செய்ய முயன்றனர். 
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாசன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கழுகுமலை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர்

இதேபோல் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மாவட்ட தலைவர் லுக்மான் தலைமை தாங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தக அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலைமறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்