கத்தியால் குத்தி விவசாயி கொலை
குத்தாலம் அருகே கத்தியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே கத்தியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விவசாயி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சிவனாகரம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது50). விவசாயியான இவர் அந்தபகுதியில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் இவருடைய அண்ணன் பாண்டியன் (55) என்பவருக்கும் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் கோவில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்சினை இருந்து வந்தது.
பரிதாப சாவு
நேற்றுமுன்தினம் இரவு நடுத்தெருவுக்கு வந்த செந்தில்குமாரை பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் வழிமறித்து கத்தியால் கழுத்து, விலா பகுதி மற்றும் கையில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
மேலும் செந்தில்குமார் கொலை தொடர்பாக அவரது அண்ணன் பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.