ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
பாப்பாக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
முக்கூடல், மார்ச்.7-
முக்கூடலில் ஆலங்குளம் -அம்பை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 34). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று காலை அருணாசலம் தனது குடும்பத்தினருடன் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்த செல்லகனி மகன் பாலு (45) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். பாப்பாக்குடியை அடுத்த கபாலிபாறை அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே பன்றி ஒன்று திடீரென பாய்ந்தது. இதனால் பிரேக் பிடித்ததில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பாலு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இந்த விபத்தில் அருணாசலத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது ஒரு குழந்தைக்கு காலில் சிராய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
விபத்தில் பலியான பாலுவுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.