தமிழ் வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடை வாசித்து புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளது-ஆசிரியர் சங்கத்தினர் குற்றச்சாட்டு
11, 12-ம் வகுப்புகளுக்கு தமிழ் வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடை வாசித்து புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.;
கரூர், மார்ச்.7-
தமிழ் வழி பாடப்புத்தகங்கள்
கரூர் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் திருத்தி எழுதப்பட்டன. புத்தகங்கள் தமிழ் வழியிலும், ஆங்கில வழியிலும் எழுதப்பட்டன. தமிழ் வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடை வாசித்து புரிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது.
இப்புத்தகங்களின் வரிகளை மாணவர்கள் படித்து புரிந்து கொள்ளவோ, மனப்பாடம் செய்யவோ இயலவே இயலாது. இப்புத்தகங்களின் எழுத்து நடை இயல்பானது அல்ல. இக்குறையை சுட்டிக்காட்டி முன்பே கருத்துக்கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
போட்டி தேர்வுகள்
இந்தநிலையில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலும் எழுத்து நடை மாற்றப்படவில்லை. தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடையை மாற்றி அமைத்தால்தான் தமிழ்வழி மாணவர்களால் படிக்க இயலும். இல்லையேல் சாதாரண பள்ளி தேர்வுகள் எழுதவே மாணவர்கள் மிகுந்த சிரமப்படுவர். போட்டி தேர்வுகள் எழுதவே முடியாது.
ஆகவே 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ்வழி பாடப்புத்தகங்களின் எழுத்து நடையை மாற்றி, சிறு, சிறு வாக்கியங்கள் ஆகவும், படிக்கும்போது எளிமையாக இருக்கும் வகையிலும், சரளமான எழுத்து நடையுடனும் அமைக்க வேண்டும். தமிழ்வழி கல்வியில் பயில்வோர் எதிர்காலத்தில் அறிவியல் தமிழை உற்பத்தி மொழியாக பயன்படுத்தும் அளவில் உருவாக்கிட வேண்டும்.
பதவி உயர்வு கலந்தாய்வு
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. ஆகவே உடனடியாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.)-ல் புதிய பணியிடங்களை உருவாக்கி, சம்பள தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி, உடனடியாக சம்பளம் பெற்றுதர வேண்டும்.
காலியாக உள்ள 12 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை 1-3-22-ன்படி தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து இவ்வாண்டுக்கான ஆசிரியர் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.