மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-06 18:40 GMT
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கல்லூரி மாணவர்
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம். இவருடைய மகன் ஸ்ரீஜி (வயது 20), இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 
இந்தநிலையில் சம்பவத்தன்று ஸ்ரீஜி தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் கவுதமுடன் சாலை ஓரத்தில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீஜி வந்த மோட்டார் சைக்கிள், முருகனின் மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். 
பலி
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஸ்ரீஜியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், முருகன் மற்றும் கவுதமை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். 
பின்னர் ஸ்ரீஜி மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்