ராணுவ வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே ராணுவ வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-06 18:30 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகன் ஜெகன் (வயது 31), ராணுவ வீரர்.

இவரும் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகே வெங்கட்டூர் கிராமம் பகுதியை சேர்ந்த ரேவதி (27) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாசிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜெகன் கடந்த 13-ந் தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரேவதி தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரேவதியின் தந்தை வெங்கடேசன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில்  போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்