நீச்சல் பழக ெசன்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
கந்திலி அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
திருப்பத்தூர், மார்ச்.7-
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகில் உள்ள வீரப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கணபதி. இவரின் மகன் தர்ஷன் (வயது 15). இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் தர்ஷன் தனது நண்பர்களான தமிழ்வேந்தன், திருவரங்கன் ஆகியோருடன் வாலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் நிலத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் நீச்சல் பழக சென்றார்.
தர்ஷன் இடுப்பில் பிளாஸ்டிக் கேன்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து நீச்சல் பழக முயன்றார். அப்போது இடுப்பில் கட்டியிருந்த கயிறு அருந்ததால் கிணருக்குள் மூழ்கினார்.
அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை அழைத்து தர்ஷனை மீட்க போராடினர். அதில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கிய மாணவனை பிணமாக மீட்டனர்.
கந்திலி போலீசார் மாணவனின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.