அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உறவினர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
ஜோலார்பேட்டை அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உறவினர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உறவினர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரின் உறவினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாச்சல் கிராமத்தை அடுத்த என்.ஜி.ஓ. நகர் பகுதியில் வசிப்பவர் முனிசாமி. இவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சம்மந்தி ஆவார்.
முனிசாமியின் மகன் பொன்னுசாமி என்ற பெஞ்சமின். அவர், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினராக உள்ளார்.
பொன்னுசாமி நேற்று காலை 7.30 மணியளவில் வழிபாட்டுக்காக மோட்டார்சைக்கிளில் கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சென்று விட்டார். அவரின் கார் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், அவரின் காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிசென்றனர். கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
போலீசார் விசாரணை
அவருடைய வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் அரவிந்த் என்பவர், ஏதோ வயர் கருகும் நாற்றம் வீசியதை அறிந்து வெளியே வந்து பார்த்தார். கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார். அதில் காரின் முன்பகுதி டயர் மற்றும் காரின் கவர் ஆகியவை தீயில் கருகின.
இதுகுறித்த தகவலை அரவிந்த் தொலைப்பேசி மூலமாக பொன்னுசாமிக்கு தெரிவித்தார். தகவலை கேள்விப்பட்டு வீட்டுக்கு விரைந்து வந்த அவர் உடனே ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.