கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறை நாளில் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டு உற்சாகம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
ஞாயிறு விடுமுறை நாளில் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டு உற்சாகம் அடைந்தனர்.
கன்னியாகுமரி
சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதே சமயத்தில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அங்கு வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்த அவர்கள் கடலில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் சென்று ரசித்தனர்.
களை கட்டியது
அதனை தொடர்ந்து காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழாவை காண வந்த கேரளாவை சேர்ந்த பக்தர்கள், கன்னியாகுமரிக்கும் சென்றதால் மாலையில் கடற்கரை களை கட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்திருந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். கடலின் இதமான காற்றை அனுபவித்தபடி சென்றனர். இதனால் கடைகளில் விற்பனையும் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.