தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பிறகு திறக்கப்பட்டது. ஆனால் எந்த பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாமல் இருந்தது. இதையடுத்து திருப்பெருந்துறை ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய பஸ் நிலையத்திற்குள் சில நாட்களுக்கு முன்பில் இருந்து அரசு பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் தனியார் பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால் தனியார் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், முத்தனூரில் இருந்து ஓலப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலை வழியாக செல்லும் கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணசேகரன், கரூர்.
குறுகிய பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் புகழூர் வாய்க்கால் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்ல க்கூடிய அளவிலான குறுகிய சிறிய பாலம் கட்டப்பட்டது. அந்த வழியாக அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். விளைபொருட்களையும், இடுபொருட்களையும் இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான பாலத்தை பெரிய அளவிலான பாலமாக மாற்றி நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு பாலத்தை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.