ஆறுகாட்டுத்துறைக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கம்

வேதாரண்யத்தில் இருந்து ஆறுகாட்டுதுறைக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அரசு பஸ் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-03-06 17:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து ஆறுகாட்டுதுறைக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அரசு பஸ் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆறுகாட்டுத்துறை கிராமம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இந்த கிராமத்தில் இருந்து வேதாரண்யம் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேதாரண்யத்திற்கு நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ சென்று வந்தனர்.
மேலும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் ஆறுகாட்டுத்துறைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
15 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் இயக்கம்
இந்த நிலையில் வேதாரண்யம் நகர் மன்ற தலைவராக புகழேந்தி பதவி ஏற்றவுடன் மீனவ கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் ஆறுகாட்டுத்துறைக்கு பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுகாட்டுதுறைக்கு நேற்று அரசு பஸ் இயக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன், அரசு வக்கீல் வெங்கடேஸ்வரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மகேந்திரகுமார், வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ்குமார், ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு நாளைக்கு 3 முறை இயக்கப்படும் 
இந்த பஸ் தற்போது தினமும் ஆறுகாட்டுத்துறைக்கு 3 முறை இயக்கப்படும் எனவும், பின்னர் 6 முறை இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர்.

மேலும் செய்திகள்