நாமக்கல்லில் பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்:
உலக மகளிர் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாமக்கல்லில் இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெண் மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கவிதா சரவணகுமார், மல்லிகா குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தை நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக மீண்டும் மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சென்ற பெண்கள் ஏந்திய பதாகைகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.