உக்ரைனில் சிக்கி தவித்த நாமக்கல் மாணவர்கள் 3 பேர் மீட்பு அரசு வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
உக்ரைனில் சிக்கி தவித்த நாமக்கல் மாணவர்கள் 3 பேர் மீட்பு அரசு வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
நாமக்கல்:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் மீட்கப்பட்டு, நேற்று அரசு வாகனம் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உக்ரைனில் தவிப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கெங்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பிரதீப். எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பையை சேர்ந்த ராமசாமி மகன் சபரி. வள்ளிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சய் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த சங்கர் மகள் செல்வபிரியா.
இவர்கள் 4 பேரும் உக்ரைன் நாட்டில் உள்ள டினிப்ரோ மாநில மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்துனர். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இவர்கள் 4 பேரும் அங்கேயே சிக்கி தவித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளை மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது.
9 பேர் மீட்பு
அதன்படி மத்திய அரசின் மூலம் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பிய சிறப்பு விமானத்தில் அவர்கள் 4 பேரும் புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை அழைத்து வரப்பட்டனர். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்த மாணவர்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில், மாவட்ட வரவேற்பு பிரிவு தாசில்தார் மதியழகன் சந்தித்து அரசு வாகனம் மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் இங்கிருந்து அரசு வாகனங்கள் மூலம் மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் படித்து வருவதாகவும், அவர்களில் இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற மாணவ, மாணவிகளை மீட்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.