பள்ளி மாணவி கடத்தல்; கல்லூரி மாணவர்கள் போக்சோவில் கைது
பள்ளி மாணவி கடத்தல்; கல்லூரி மாணவர்கள் போக்சோவில் கைது
வெண்ணந்தூர்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகிழன் (வயது 20). திருச்செங்கோடு பருத்திப்பள்ளி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சிபி சக்கரவர்த்தி (20). நண்பர்களான இவர்கள் இருவரும் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகிழன் தொட்டிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி நண்பர் சிபி சக்கரவர்த்தி உதவியுடன் கடத்தி சென்றார். இதையடுத்து சிறுமி அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து நடந்ததை கூறினார். இதுகுறித்து சிறுமியின் தந்தை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.