குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடும் கும்பல்
குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடும் கும்பல்
சமீப காலமாக ஆன்லைன் மூலமாக பல்வேறு வகைகளில் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மர்ம ஆசாமிகள் நூதன முறையில் பணத்தை திருடி வருகின்றனர். அந்த வகையில் செல்போனில் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறும் மர்ம ஆசாமிகள் உங்களிடம் உள்ள ஏ.டி.எம். அட்டையில் உள்ள எண்களை கூறுமாறு நைசாக பேசுவார்கள். பின்னர் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட சில தகவல்களை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வரும். இதன் பின்னரே வங்கியில் இருந்து பேசுவதாக கூறியவர்கள் ஏமாற்று கும்பல் என்பது பொதுமக்களுக்கு தெரிய வரும்.
இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த வக்கீல் பா.சு.மணிவண்ணன் என்பவருடைய செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் மதியம் ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ரூ.3 கோடியே 60 லட்சம் மற்றும் ஐ போனுக்கு தங்களுடைய செல்போன் எண் தேர்வாகி உள்ளதாகவும், அதை பெற்றுக் கொள்ள பெயர், செல்போன் எண் மற்றும் முகவரியை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கூறப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், குறுஞ்செய்தி அனுப்பியது மோசடி கும்பல் என்பதை தெரிந்து கொண்டு, அதை உறுதிப்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி வந்த எண்ணிற்கு பதில் அனுப்ப முயற்சி செய்துள்ளார்.
உஷாராக இருக்க வேண்டும்
அப்போது அந்த எண்ணிற்கு திரும்ப குறுஞ்செய்தி அனுப்ப முடியாது என்று பதில் வந்துள்ளது. இதனால் அவருடைய செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தி நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து வந்தது என்பதும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரியும் போலியானது என்பதும் தெரிய வந்தது. ஆன்லைன் மூலமாக நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து போலீசார் கூறியதாவது, கோடிக்கணக்கில் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதாக வரும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வங்கி தொடர்பான ரகசிய விபரங்களை ஆன்லைன் மற்றும் செல்போன் மூலமாக தெரிவிக்காமல், நேரடியாக வங்கிகளுக்கே சென்று விபரங்களை தெரிந்து கொள்வது நல்லது என்றனர்.