நாகூர்-நாகை சாலையில் ஆபத்தான சிக்னல் கம்பம் அகற்றப்படுமா?

நாகூர்-நாகை சாலையில் ஆபத்தான நிலையில் காணப்படும் சிக்னல் கம்பம் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-03-06 17:20 GMT
நாகூர்:
நாகூர்-நாகை சாலையில் ஆபத்தான நிலையில் காணப்படும் சிக்னல் கம்பம் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
முக்கிய சாலை
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
நாகையில் இருந்து சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், கும்பகோணம், ஆகிய ஊர்களுக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நாகூர் மெயின் ரோடு வழியாக தான் செல்கிறது. இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருந்து வருகிறது. 
துருப்பிடித்த சிக்னல் கம்பம்
 நாகூர்-நாகை சாலை ஓரத்தில் போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னல் இரும்பு கம்பி சேதமடைந்து செயல்படாமல் இருந்து வருகிறது. மேலும் இரும்பு கம்பியின் அடிப்பகுதியில் துருப்பிடித்து சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. 
இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள சிக்னல் கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்