பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி டுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர் கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-03-06 16:45 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர் கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி ஊர்வலமாக சென்றனர். 

தேர்த்திருவிழா

பொள்ளாச்சி கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந் தேதி கம்பம் நடப்பட்டது. 

இந்த கம்பத்தில் திருவிழா முடியும்வரை பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவது வழக்கம் என்பதால் தினமும் ஏராளமான பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி கோவில் பூவோடு நிகழ்ச்சி நடந்தது. 

பறவை காவடி

இதனை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடியில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

இதில் விரதம் இருந்த பக்தர்கள் முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அலகு குத்தினர். மேலும் அவர்கள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பறவைக்காவடி அமைத்து 25-க்கும் மேற்பட்டோர் உடலில் பல இடங்களில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

அம்மன் பவனி

மேலும், பலர் பக்தர்கள் தனது கன்னத்தில் நீளமான அளவிற்கு அலகையும் குத்திவந்தனர். இந்த செயல் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்ததும் பறவைக்காவடி புறப்பட்டது. 

மார்க்கெட் ரோடு, விநாயகர் கோவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் வெங்கட்ரமணன் வீதி, மத்திய பஸ் நிலையம் ரவுண்டானா, காந்தி சிலை, கோவை ரோடு, தேர் நிலையம், சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. 

போலீசார் பாதுகாப்பு

முன்னதாக பறவைக்காவடி முன்பு மேளதாளம் முழங்க பக்தர்கள் பூவோடு எடுத்து சென்றனர். மேலும், பக்தர்கள் பலர் தங்கள் உடலில் சாட்டை அடித்தவாறு சென்றனர். 

விழாவை முன்னிட்டு, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்