விருத்தாசலத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

விருத்தாசலத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-03-06 16:44 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் சந்தை தோப்பு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு செடல் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த 1-ந்தேதி அம்மன் சுய ரூபத்துடன் கோட்டைக்கு சென்று நிசாசனி வயிற்றைக் கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிந்து குழந்தையை முறத்தில் ஏந்திவரும் ஐதீக விழா நடந்தது.  

தெடர்ந்து, மறுநாள் (2-ந்தேதி) மயானக்கொள்ளை உற்சவமும், 3-ந்தேதி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் தாண்டவராய சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பால்குடம் ஊர்வலம்

 10-ம் நாள் திருவிழாவான நேற்று செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் காலை 9 மணிக்கு மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊர்வலமானது கடைவீதி, பாலக்கரை, கடலூர் ரோடு வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) விளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்