திருமழிசை பேரூராட்சியில் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் புகார் மனு
திருமழிசை பேரூராட்சியில் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
தி.மு.க. வேட்பாளர் வெற்றி
திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இங்கு நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 6 வார்டிலும், அ.தி.மு.க. 6 வார்டிலும், ம.தி.மு.க., பா.ம.க, சுயேச்சைகள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். திருமழிசை பேரூராட்சியில் நேற்று முன்தினம் நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் 4-வது வார்டு உறுப்பினர் வடிவேலு என்பவரும், அ.தி.மு.க. சார்பில் 7-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் என்பவரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் திருமழிசை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சியின் செயல் அலுவலருமான ரவி தலைமையில் நடைப்பெற்றது. தேர்தல் முடிவில் தி.மு.க. வேட்பாளர் வடிவேலு 7 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார், அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் 6 ஓட்டுகள் பெற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் 2 ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
புகார் மனு
இதனால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் தலைமையில், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் கவுதமன் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் இது சம்பந்தமான புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மறு தேர்தல்
பின்னர் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றியை தடுத்து நிறுத்தினார். செல்லாத வாக்குகள் குறித்து உறுப்பினர்கள் கேட்ட போதும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அரசு அலுவலர் தனது பணியை சரிவர செய்யாமல் இவ்வாறு செயல்படுவது ஜனநாயக படுகொலை ஆகும். இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு திருமழிசை பேரூராட்சியில் மீண்டும் மறு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.