‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சீரமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டி
சென்னை அகரம் ஜவகர் நகர் 2-வது குறுக்குத் தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெட்டியை சீரமைத்துள்ளனர். மின்வாரியத்தின் துரித நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
மின்வாரியத்தின் துரித நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பேரேரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின் இணைப்பு தரப்படாமல் இருப்பது குறித்த ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. மின் வாரியத்தின் நடவடிக்கையால் தற்போது அந்த மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் தெரு மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
சென்னை சூளைமேடு கண்ணகி தெருவில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஒரே இடத்தில் குப்பைகள் குவிந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
- தெரு மக்கள்.
பள்ளம் விழுந்த சாலை
சென்னை வேளச்சேரி பிராமணர் தெருவில் உள்ள சாலையையொட்டி பள்ளம் ஒன்று விழுந்துள்ளது. தற்காலிகமாக இதை சரி செய்ய கட்டைகளை வைத்து மூடி வைத்துள்ளனர். இருப்பினும் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் தவறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் விழுந்த பள்ளத்தை மூட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- செல்வகுமார், வேளச்சேரி.
ஆபத்தான மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தை அடுத்த பாட்டைகுப்பம் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களில் பல மின் கம்பங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களப்பணி செய்து இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், சமூக ஆர்வலர்.
சாலையில் தேங்கிய கழிவுநீர்
சென்னை சூளை ராஜா முத்தையா சாலையில் கழிவுநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலை இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்து தர வேண்டும்.
- சிவசங்கரன், சூளை.
குப்பைத்தொட்டி வேண்டும்
சென்னை அம்பத்தூர் அண்ணனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் குப்பை தொட்டி வசதி இல்லாததால் குப்பைகள் சாலையிலையே கொட்டப்பட்டு சாலை முழுவதும் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி கவனித்து இந்த பகுதியில் குப்பை தொட்டி வசதி அமைத்து தர வேண்டும்.
- மோகன்ராஜ், சமூக ஆர்வலர்.
பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள நெசப்பாக்கம் ஏரிக்கரை பிரதான சாலையை ஒட்டி பல பழுதடைந்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை அகற்றினால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கப்படலாம். பொதுமக்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை கவனித்து நிரந்த தீர்வு வழங்குமா?
- பொதுமக்கள்.
சாய்ந்து கிடக்கும் பெயர் பலகை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பேரமனூர் எம்.ஜி.ஆர் தெருவின் பெயர் பலகை சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் முகவரி தேடி வருவோர் இந்த பகுதியை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கையை எடுப்பார்களா?
- சம்பத், மறைமலைநகர்.
சாலை அமைக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் அஷோக் நகர் விரிவாக்கம் அருகே புதிதாக சாலை அமைக்க கற்கள் கொட்டபட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சாலை பணி முழுவதுமாக முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் விரைந்து சாலை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஊர் மக்கள்.