நகர்புற மக்கள் தொகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது பிரதமர் மோடி பேச்சு

நகர்புற மக்கள் தொகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என புனேயில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2022-03-06 14:42 GMT
கோப்பு படம்
புனே, 
நகர்புற மக்கள் தொகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என புனேயில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
மெட்ரோ ரெயில் திட்டம்
பிரதமர் மோடி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் இன்று மராட்டிய மாநிலம் புனே வந்தார். முதலில் புனே மாநகராட்சி அலுவலகத்தில் 9.5 அடி உயரம், 1.85 டன் எடையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார். 
பின்னர் கர்வாரே கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில், அவர் கர்வாரே கல்லூரி- வானாஸ், பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி - புகேவாடி இடையே மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ரெயிலில் பயணம்
பின்னர் மெட்ரோ ரெயில் நிலையத்தை பார்வையிட்ட அவர், புனேயில் நடந்து வரும் மெட்ரோ திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மோடி அவரது செல்போன் மூலம் கர்வாரேவில் இருந்து ஆனந்த் நகர் செல்ல டிக்கெட் எடுத்தார். அந்த டிக்கெட்டை பயன்படுத்தி கர்வாரேவில் இருந்து ஆனந்த்நகர் வரை சுமார் 10 நிமிடங்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் ரெயிலில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உரையாடினார். 
இந்தநிலையில் ஆனந்த்நகர் சென்றவுடன் தனது பயண அனுபவம் குறித்து அங்குள்ள விருந்தினர் புத்தகத்தில் மோடி எழுதினார். புனேயில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரெயிலுக்கு முக்கியத்துவம்
இதையடுத்து எம்.ஐ.டி. கல்லூரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் இ-பஸ் சேவை உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- 
இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. புனே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பும், பணிகள் முடிந்து சேவையை தொடங்கி வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். முன்பு எல்லாம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். ஆனால் திட்டம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. 
புனே மெட்ரோ ரெயில் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டத்தை முடிக்க முடியும் என்ற செய்தியை தந்து உள்ளது. பொதுமக்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வேண்டும். நகரமயமாதல் வேகமாக நடந்து வருகிறது. 2030-ம் ஆண்டு நகர்புற மக்கள் தொகை 60 கோடியை தாண்டும். நகர்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பது பல வாய்ப்புகளை கொடுக்கும். அதே நேரத்தில் இதில் பல சவால்களும் உள்ளது. 
பலதரப்பட்ட போக்குவரத்து
குறிப்பிட்ட அளவில் தான் மேம்பாலங்களை (பிளை ஓவர்) நம்மால் கட்ட முடியும். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப எவ்வளவு மேம்பாலங்களை கட்ட முடியும்?. நம்மால் எப்படி சாலையை விரிவுபடுத்த முடியும்?. இதுபோன்ற சூழலில் பலதரப்பட்ட போக்குவரத்து தான் இதற்கு ஒரே வழி. எனவே தான் எங்கள் அரசு பலவகையான போக்குவரத்தின் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 
முன்பு மெட்ரோ ரெயில் டெல்லி மற்றும் ஒரு சில நகரங்களில் மட்டும் தான் இருந்தது. தற்போது 24 நகரங்களுக்கு மேல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் பேசினார். 
தேவையில்லாத கருத்துகள்
விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதல்-மந்திரி அஜித்பவார், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மந்திரி ஏக்னாத் ஷிண்டே, புனே மேயர் முரளிதர் மாகோல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சமீபத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சத்ரபதி சிவாஜியின் குரு மற்றும் சாவித்ரிபாய் புலே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதை மோடி முன்னிலையில் சுட்டி காட்டி பேசிய துணை முதல்-மந்திரி அஜித்பவார், "உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் சிலர் மராட்டியம் மற்றும் அதன் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையில்லாத கருத்துகளை கூறுகின்றனர்" என்றார்.
----

மேலும் செய்திகள்