கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடிமாவட்ட கலைஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2022-03-06 14:04 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விருது
தமிழக அரசு மாவட்டக் கலைமன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 85 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2021-22-ம் ஆண்டுக்கு கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலைமன்றத்தின் மூலம், தூத்துக்குடிமாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.
விண்ணப்பம்
எனவே தூத்துக்குடிமாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசைமுதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் எனஅ னைத்து வகை கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்
அதன்படி 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைவளர்மணி, 36 முதல் 50 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி, 51 முதல் 65 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைநன்மணி, 66 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைமுதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
ஏற்கனவே தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலைமன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விரது பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயது சான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்களுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலைபண்பாட்டுமையம், 870/21, அரசுஅலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்புநிதிஅலுவலகம் அருகில்), நெல்லை, தொலைபேசி எண்: 0462-2901890 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்