குமரலிங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்
குமரலிங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்
மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் குறுகிற இடத்தில் பஸ்கள் நின்று செல்வதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே குமரலிங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிலையம்
மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த சிறு ந கரத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பல நகரங்களுக்கு சென்று திரும்ப குமரலிங்கம் வந்துதான் பஸ்சில் செல்கிறார்கள். இங்கு உடுமலை பழனி ரோட்டில் உள்ள திறந்த வெளியில் நின்று தான் பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.ஆனால் பஸ் நிற்கும் பகுதி மிக குறுகிற இடமாகும். இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்போது அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த நிறுத்தம் உள்ள பகுதியில் வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகள், மருத் துவமனை ஆகியவை உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த இடம் மக்கள் பயன்பாட்டுக்கே போதுமான இடவசதி இல்லை. இதோடு பஸ்களும் நின்று செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கோரிக்கை
ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் பஸ் நிறுத்தம் ரோட்டோரத்தில் மிகசிறிய இடப்பரப்பில் உள்ளது. இங்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லை. கழிப்பிட வசதி இல்லாததால் அருகிலுள்ள ஒதுக்குப்புறமான இடங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சாக்கடை வசதி இன்றி குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர். வசதி கிடையாது. பயணிகள் காத்திருக்க இருக்கைகள் இல்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே குமரலிங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.