பெசன்ட்நகர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
பெசன்ட்நகர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருடைய மகன் கவுரிசங்கர் (வயது 20). இவர் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திருவான்மியூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ஈஸ்வரன் (20). இவர் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை தங்களது நண்பர்களான அர்ஜூன் மற்றும் சோமேஸ்வரனுடன் பெசன்ட்நகர் கடலில் குளிக்கச் சென்றனர். நண்பர்கள் 4 பேரும் கடலில் குதூகலமாக குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஈஸ்வரன் தத்தளித்தார். இதனை கண்ட கவுரிசங்கர், நண்பரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் கடலில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவரும் கூச்சலிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார், ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேரையும் தேடினர். இதில் கவுரிசங்கர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். ஈஸ்வரனை தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று மாலை மீனவர்களின் வலையில் ஈஸ்வரன் உடல் சிக்கியது. இதுபற்றி சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.