60 ஆண்டுகள் பழமையான துறைமுக பாலத்தில் விரிசல் - பொதுமக்கள், மீனவர்கள் செல்ல தடை
புதுச்சேரியில் 60 ஆண்டுகள் பழமையான பாலத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் பொதுமக்கள், மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் 1962 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஆட்சியில் துறைமுக பயன்பாட்டிற்காக பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. பிற்காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் போன அந்த பாலம் வெறும் காட்சிப் பொருளாக இருந்துவிட்டது.
பின்னர் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காகவும், திரைப்பட படப்பிடிப்புக்காவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது. இதனிடையே பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தூண்கள் சேதமடைந்து இருந்ததால், அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காணப்படும் கடல் சீற்றத்தால் எழுந்த அலைகளால் பாலத்தின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்தது. இதனால் பாலத்திற்கு அருகில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.