‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காளிப்பட்டி மற்றும் மல்லசமுத்திரம் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர் என்று ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதற்கு உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க செய்து மாணவர்களின் ஆபத்தான பயணத்தை தவிர்த்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
-ஊர்மக்கள், காளிப்பட்டி, நாமக்கல்.
===
சுகாதார சீர்கேடு
தர்மபுரி நகரை அடுத்த பிடமனேரி ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலை தர்மபுரி நகரையும், சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையையும் இணைக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரிக்கரை பகுதியில் சாலையை ஒட்டி பலர் குப்பைகளை கொட்டுகின்றனா். இந்த குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் கரும்புகை பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, பிடமனேரி, தர்மபுரி.
===
அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தினமும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்சாரம் விட்டு, விட்டு வருவதால் ஆங்காங்கே உள்ள மின் கம்பங்களில் மின்பொறிகள் வெடித்து சிதறுகின்றன. மேலும் கடைகளில் உள்ள மின்சாதன பொருட்கள் மற்றும் மின் மோட்டார்களும் பழுதாகின்றன. மின்சாரம் இதுபோல் துண்டிக்கப்படுவவதால் விவசாயிகள், கடைக்காரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
-ஊர்மக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.
===
மணிக்கூண்டு சரிசெய்யப்படுமா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் பழமையான மணிக்கூண்டு ஒன்று உள்ளது. இது பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மணிக்கூண்டை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், திருச்செங்கோடு.
==
குப்பைகளை எரிக்கலாமா?
சேலம் அதிகாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி மற்றும் பாலாஜி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் கிருஷ்ணா நகர் காலனி செல்லும் வழியில் உள்ள கிணற்றில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாகி காற்று மாசடைகிறது. இதன் காரணமாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், அயோத்தியாப்பட்டணம், சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேலகவுண்டன்புதூரை அடுத்த எஸ்.கே. நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி தொல்லை கொடுக்கின்றன. இந்த தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-எஸ்.கே.நகர் மக்கள், சேலம்.
==
குப்பை தொட்டி வேண்டும்
தர்மபுரி மாவட்டம் சிக்கமாரண்டஅள்ளி கிராமம் கீழ வீதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.
===
வீணாகும் குடிநீர்
சேலம் நரசோதிப்பட்டி 3-வது வார்டு, இந்தியன் வங்கி காலனியில் இருந்து முகில் நகர் செல்லும் வழியில் தண்ணீர் குழாய் உடைந்துள்ளது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடுகிறது. மேலும் இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுபற்றி பலமுறை புகார் செய்தும் கடந்த ஒரு வாரமாக எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே சேதம் அடைந்த தண்ணீர் குழாயை சரி செய்து, பள்ளத்தையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.பன்னீர்செல்வம், நரசோதிப்பட்டி, சேலம்.
==