சேலத்தில் எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்

எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து, சேலத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-05 22:19 GMT
சேலம்:
எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து, சேலத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனையை எதிர்த்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். இதில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் உள்பட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கைவிடக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
2 நாட்கள் வேலை நிறுத்தம்
இது குறித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு ரூ.39.6 லட்சம் கோடிகள் ஆகும். அனைத்து தனியார் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை விட 3.8 மடங்கு அதிகம். ஆனால் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. குறிப்பாக எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் எதிரான மத்திய அரசின் முடிவை கைவிடக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு முடிவை அறிவிக்காவிட்டால் வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது,என்றார்.

மேலும் செய்திகள்