வாழப்பாடி அருகே லாரி மோதி விபத்து: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
வாழப்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கல்லூரி மாணவர்
வாழப்பாடி அருகே முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் மலைச்சாமி (வயது 21). அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் மணிகண்டன் (19). இவர் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தம்பட்டியில் இருந்து தம்மம்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்களில் மலைச்சாமி, மணிகண்டன் ஆகியோர் சென்றனர். மோட்டார்சைக்கிளை மலைச்சாமி ஓட்ட பின்னால் மணிகண்டன் அமர்ந்து இருந்தார்.
2 பேர் பலி
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் திரும்பியபோது எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலைச்சாமி, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.