நம்பியூரில் கட்டிலில் படுத்து பீடி குடித்தபோது தீப்பிடித்தது; உடல் கருகி முதியவர் சாவு
நம்பியூரில் கட்டிலில் படுத்து பீடிகுடித்தபோது தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
நம்பியூர்
நம்பியூரில் கட்டிலில் படுத்து பீடிகுடித்தபோது தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
பீடி குடித்தார்
நம்பியூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 75). இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி இறந்துவிட்டார். மகள் மகேஸ்வரி திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி மகள் வீட்டில் தங்கியிருந்து வந்தார்.
மேலும் கருப்பசாமிக்கு பல ஆண்டுகளாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை மகேஸ்வரி வெளியே சென்றுவிட்டார். இதனால் கருப்பசாமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சாப்பிட்டுவிட்டு அவர் வீட்டின் உள்ளே கட்டிலில் படுத்தபடி பீடி குடித்து கொண்டிருந்தார்.
தீயில் கருகி சாவு
இதில் எதிர்பாராதவிதமாக கட்டிலில் தீப்பொறி பட்டது. இதனால் கட்டில் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ கருப்பசாமி உடலிலும் பிடித்து எரிந்தது. இதில் அவர் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிசென்று பார்த்தனர். சிறிதுநேரத்தில் கருப்பசாமி உடல் கருகிய நிலையில் பிணமானார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.