குடிபோதையில் மகனை வெட்டிக் கொன்ற இறைச்சி கடைக்காரர் கைது
திருமங்கலம் அருகே குடிபோதையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே குடிபோதையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இறைச்சி கடை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெடுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 50). இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி சின்ன பாண்டியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக ஒரே ஊரில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகன் கண்ணன்(27).
இவர் தாயாருடன் வசித்து வந்தார். கொத்தனார் வேலை பார்த்து வந்த கண்ணன் கடந்த ஒரு மாதமாக திருப்பூர் பகுதியில் வேலை பார்த்துவிட்டு நேற்று காலை ஊருக்கு வந்துள்ளார்.
தம்பியுடன் தகராறு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுகுடித்து விட்டு வெள்ளையன் அவருடைய தம்பி காளியுடன் தகராறில் ஈடுபட்டார். இதைபார்த்த கண்ணன் இருவரையும் விலக்கி விட்டு கண்டித்துள்ளார்.
அப்போது தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து 2 பேரும் சென்று விட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத வெள்ளையன் நள்ளிரவு மீண்டும் மகனிடம் சென்று தகராறு செய்துள்ளார்.
வெட்டிக்கொலை
இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கறி வெட்டும் கத்தியால் மகன் என்றும் பாராமல் கண்ணனை வெள்ளையன் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளையன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பியோடிய வெள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை தட்டிக்கேட்ட மகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.