பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலி: சாம்ராஜ்நகரில் ஒருமாதம் அனைத்து கல்குவாரிகளையும் மூட உத்தரவு - மந்திரி சோமண்ணா பேட்டி
சாம்ராஜ்நகரில், பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலியானதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளவும், அதற்காக ஒருமாத காலம் கல்குவாரிகளை மூடவும் மந்திரி சோமண்ணா உத்தரவிட்டுள்ளார்.;
கொள்ளேகால்:
கல்குவாரி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மடஹள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கும்பகல்லு கிராமத்தில் ஸ்ரீராமகுன்று மலை உள்ளது. இந்த மலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அந்தப்பகுதியை சேர்ந்த மகேந்திரப்பா மற்றும் கேரளாவை சேர்ந்த அக்கீம் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து கல்குவாரி நடத்தி வருகிறார்கள்.
இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இந்த கல்குவாரியில் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு கற்களை உடைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
10 பேர் பலி
அப்போது வெடியின் அதிர்வால் குன்றின் மேல் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு கீழே விழுந்தது. அந்த பாறாங்கல் கீழே இருந்த வாகனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குண்டலுபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கோர விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது.
மீட்பு பணி
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த கல்குவாரியின் குத்தகைதாரர்களான மகேந்திரப்பா, அக்கீம் மற்றும் குவாரி மேற்பார்வையாளர் நவீத் ஆகியோர் மீது போலீசில் கனிம வளத்துறை அதிகாரிகள் புகார் செய்தனர். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், அரசு உத்தரவை மீறி அதிக அதிர்வினை கொண்ட வெடிகளை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
2 பேருக்கு வலைவீச்சு
அந்த புகாரின்பேரில் குண்டலுபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேந்திரப்பா, அக்கீம் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே இந்த கோர விபத்தில் மண்ணில் புதைந்து பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி நேற்றும் நடந்தது. இதில் சுமார் 8 மணி நேர இடைவிடாத போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுமுல்லா அலியாஸ் என்பது தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரை அடையாளம் காணும் பணியும், மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அதிகாரிகள், மற்றும் போலீசாரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
மந்திரி சோமண்ணா
அப்போது அப்பகுதி கிராம மக்கள் மந்திரி சோமண்ணாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் மந்திரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் இப்பகுதியில் சட்டவிரோதமாக பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட மந்திரி சோமண்ணா இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் அவர் குண்டலுபேட்டை டவுனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். இந்த சோதனை ஒரு மாத காலம் நடைபெறும். இந்த சோதனையின்போது சட்டவிரோத கல்குவாரிகளுக்கு சீல் வைக்கப்படும். இந்த பணிக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஒருமாத காலம் மூட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரியை கடிந்து கொண்ட மந்திரி
பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலியான கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட மந்திரி சோமண்ணா இதுதொடர்பாக குண்டலுபேட்டை டவுனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி நாகபூஷனை அழைத்து கடுமையாக கண்டித்தார். ‘நீ இத்தனை நாள் உட்கார்ந்து சாப்பிட்டதுபோதும். கொஞ்சம் வேலை செய். நான் இங்கு 3 நாட்கள் தங்கி உன் பணிகளை கவனிப்பேன்’ என்று கூறி கடுமையாக கடிந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.