தேர்தல் விரோதத்தில் வாலிபர் அடித்துக் கொலையா
விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால், அவர் தேர்தல் விரோதத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் விபத்தில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால், அவர் தேர்தல் விரோதத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தொழிலாளி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் மாரிசேகர் (வயது 22). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கோரையாறு குளம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
காயத்துடன் கிடந்தார்
இந்த நிலையில் வேம்பையாபுரம் கிராமம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பழைய கட்டிடம் அருகே மாரிசேகர் பலத்த காயத்துடன் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாரிசேகரின் அண்ணன் கண்ணதாசன் அங்கு சென்று, மாரிசேகரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரிசேக பரிதாபமாக இறந்தார்.
விபத்து வழக்கு
இந்த நிலையில் மாரிசேகர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பழைய கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து அவர் இறந்து விட்டதாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதை அறிந்த மாரிசேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து நேற்று காலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாரிசேகர் சாவில் மர்மம் இருப்பதாகவும், தேர்தல் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நெல்லையில் போராட்டம்
இந்த நிலையில் அவர்கள், மாலையில் மாரிசேகர் உடல் வைக்கப்பட்டுள்ள ெநல்லை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அங்கு பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால், அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மெயின் ரோட்டில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர செயலாளர் துரை பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடலை வாங்க மறுப்பு
பின்னர் அவர்கள், கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் பங்களா நோக்கி புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், “மாரிசேகரை தேர்தல் பகையால் அடித்துக் கொலை செய்து உள்ளனர். ஆனால், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே, மாரிசேகரை கொன்ற 9 பேரை கைது செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் அவரது உடலை வாங்க மாட்டோம்’’ என்று கூறினர்.
நடவடிக்கை
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருந்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறிய உறவினர்கள் தொடர்ந்து அங்கு காத்திருந்தனர்.
இதற்கிைடயே, மாரிசேகரின் அண்ணன் கண்ணதாசன், தேர்தல் விரோதத்தில் மாரிசேகரை 9 பேர் கொலை செய்து இருப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.