பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
ராமநாதபுரம் பகுதியில் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பகுதியில் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மிளகாய் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, ஆனைகுடி, மேலச் சீத்தை உள்ளிட்ட பல கிராமங்களிலும் பல ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் செடிகள் நட்டு உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதால் மிளகாய் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
பூச்சி தாக்குதல்
இது பற்றி விவசாயி முருகேசன் கூறியதாவது:-
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் மிளகாய் செடி நட தொடங்குவோம். மாசி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கிய பின்னர் செடிகளிலிருந்து மிளகாய்களை பறிக்க தொடங்கி விடுவோம்.
இந்த ஆண்டு திருஉத்தரகோசமங்கை, நல்லாங்குடி, மேலச்சீதை, ஆனைகுடி, களரி உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் பூச்சித்தாக்குதல் அதிகம் உள்ளது. பூச்சி தாக்குதலில் இருந்து மிளகாய் விளைச்சல் நன்றாக இருப்பதற்காக வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி 3 முறைக்கு மேல் பூச்சி மருந்தும் அடித்து வருகின்றோம். அதன்பிறகு ஓரளவு நோய் தாக்குதல் குறைந்து உள்ளது. இருந்தாலும் விளைச்சல் மிக குறைவாக உள்ளது. இந்த ஆண்டு நல்ல விலை இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும். இன்னும் 2 மாதத்திற்கு மிளகாய் சீசன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.