8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு;குமரியில் 5,539 பேர் எழுதினர்

8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு குமரியில் 22 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 5,539 மாணவர்கள் எழுதினர்.;

Update: 2022-03-05 18:38 GMT
நாகர்கோவில், 
8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு  தேர்வு குமரியில் 22 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 5,539 மாணவர்கள் எழுதினர்.
குமரியில் தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி (திறனாய்வு) கல்வி உதவித்தொகை பெற தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பு வரை என 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படும். இதற்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 
5,539 மாணவர்கள் எழுதினர்
நாகர்கோவிலில் டதி பெண்கள் பள்ளி, எஸ்.எம்.ஆா்.வி. பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை தேர்வு நடந்தது. தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. 
மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத 5,618 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று 5,539 பேர் எழுதினர். 79 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 
முன்னதாக மாணவர்கள் தங்களது பெற்றோருடன் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் முக கவசம் அணியவும், சானிட்டைசர் கொண்டு கைகளையும் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தொ்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்