குடும்ப பிரச்சினையில் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை
கீழ்பென்னாத்தூரில் குடும்ப பிரச்சினையில் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் குடும்ப பிரச்சினையில் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கணவன்-மனைவி தகராறு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 35). இவரது மனைவி மேரி (28). இவர்களுக்கு 2 மகன்களும், ஜூலி (4) உள்பட 2 மகள்களும் உள்ளனர். பழனி ஷோபா தைக்கும் தொழிலுக்காக சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
கீழ்பென்னாத்தூரில் உள்ள வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. ஜூலியை தவிர மற்ற 3 பேரும் பள்ளிக்கு செல்கின்றனர்.
சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை
இந்த நிலையில் மேரி குடும்ப பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பெற்ற மகள் என்றும் பாராமல் ஜூலிக்கு அடிக்கடி தொடை, கை, கால் ஆகிய இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டு ஹெல்ப் லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், அணி உறுப்பினர் பாலையா மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் ஜூலியின் தாய் மேரியிடம் விசாரணை நடத்தியதில், குடும்ப பிரச்சினை காரணமாக இதுபோன்று நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
சிறுமியின் உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருப்பதை கண்ட அவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெண் கைது
இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், அணி உறுப்பினர் பாலையா ஆகியோர் சிறுமியின் தாய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து, மேரியை கைது செய்தார்.