தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?-வேளாண்மை அதிகாரி விளக்கம்

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-05 17:36 GMT
தர்மபுரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுருள்வெள்ளை ஈ தாக்குதல்
சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை மரங்கள் மற்றும் வாழை, சப்போட்டா ஆகியவற்றை தாக்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தென்னை மரங்களில் பரவலாக சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் காணப்படுகிறது. மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து சுருள் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை ஒளிரச் செய்வதன் மூலமும் இவற்றை கவர்ந்து அழிக்கலாம்.
சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஏற்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் அவற்றை அழிக்கலாம். இவை அதிகளவு பரவும்போது பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தென்னந்தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். இவற்றை பரவ விடுவதன் மூலம் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும்.
மானியத்தில் ஒட்டும் பொறி
கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் இரை விழுங்கிகளின் முட்டைகளை விடலாம். இந்த முட்டைகள் அடங்கிய அட்டையானது தர்மபுரி மாவட்டத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
அதிக அளவு பூச்சி கொல்லிகளை உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரி பூச்சிகள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்த வேண்டும். தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்