கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் அறிவிப்பு
தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் அறிவித்துள்ளார். அவருடைய கணவர் கட்சி பொறுப்பை உதறி உள்ளார்.
பொறையாறு:-
தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் அறிவித்துள்ளார். அவருடைய கணவர் கட்சி பொறுப்பை உதறி உள்ளார்.
பெண் கவுன்சிலர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரஸ்வதி. இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். இவருடைய கணவர் வெற்றிவேல் தி.மு.க. பேரூர் செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் சரஸ்வதி நேற்று பேரூராட்சி கவுன்சிலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இது குறித்து சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சரிடம் கோரிக்கை
பேரூராட்சி தேர்தல் அறிவித்த உடன் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு தன்னை தேர்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதே போல் அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதனால் வருத்தம் அடைந்த நான் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அன்று மதியம் எனது கணவரை அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏவை வீட்டில் சென்று சந்தியுங்கள். உங்களுக்கு துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி நானும் எனது கணவரும் எம்.எல்.ஏ. வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தோம்.
ராஜினாமா
நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக எம்.எல்.ஏ. கூறினார். இதனால் அதிருப்தி அடைந்தோம். உறுப்பினராக இருந்து மட்டும் செயல்பட முடியாது என்ற நிலையில் பேரூராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் அவருடைய கணவர் வெற்றிவேல் தான் வகித்து வந்த தி.மு.க. பேரூராட்சி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் 10 ஆண்டு காலமாக தரங்கம்பாடி பேரூர் தி.மு.க. செயலாளராக இருந்து வந்தேன். எனது குடும்பம் பாரம்பரிய தி.மு.க. குடும்பமாகும். எனது தந்தை தலைவர் கருணாநிதியை சைக்கிளில் அழைத்துச்சென்று கூட்டம் நடத்தியவர். பேரூராட்சி தலைவர் பொறுப்பை எனது மனைவிக்கு கேட்டேன். அவருக்கு வழங்கப்படவில்லை.
பதவி வழங்க மறுப்பு
2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை எனது மனைவி பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகவில்லை. பொறையாறு புதிய பஸ் நிலையம் கொண்டுவரவும், பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரவும் பாடுபட்டார். இவருக்கு தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ வழங்க மறுத்து விட்டனர். இனியும் கட்சி செயலாளராக இருந்து கட்சி பணி ஆற்ற முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே எனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். தொடர்ந்து தி.மு.க. உறுப்பினராக இருந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.