கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
100 பேருக்கு
தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பு வழங்க உள்ளது.
சுற்றுச் சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தயாரிப்புகள் தொழில் நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்குட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வழங்கவுள்ளது.
குழு மூலம் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலசங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு சாம்பியன் விருது வழங்கப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2 தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்யும்.
இதற்கான விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமை சாம்பியன் விருது என குறிப்பிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம். மேலும் பசுமை சாம்பியன் விருதுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.