சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடனுதவி- கலெக்டர்
சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடனுதவி
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கடன் திட்டங்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கைவினை கலைஞர்கள்
திட்டம் 1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவிகள்
மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்பிக்க வேண்டும்.
மேற்கண்ட கடன் திட்டங்கள் மூலம் கடன்பெறவிரும்பும் நபர்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, அல்லது நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-ம் தளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ விண்ணப்பத்தினை பெற்று உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.