ரூ.6 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ரூ.6 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-05 17:11 GMT
நாகப்பட்டினம்:
நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ரூ.6 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி உள்ளது. இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 
நாகையில் நேற்று முன்தினம் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடிக்க செல்லாததால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இதபோல மாவட்டத்தில் 1,000 விசைப்படகுகள், 4,500 பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ரூ.6 கோடி மீன் வர்த்தகம்
நாகை மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.3 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும். கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ரூ.6 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. 
மார்ச் மாதத்தில் கடல் சீற்றம்
எப்போதும் இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் உள்ளோம். மீன்பிடிக்க சென்றவர்களையும், மீனவர்களையும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்