எனக்கு பொதுச்செயலாளர் சசிகலா தான் என்னை நீக்கியது செல்லாது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பரபரப்பு பேட்டி

“எனக்கு பொதுச்செயலாளர் சசிகலா தான், என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது செல்லாது” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கூறினார்

Update: 2022-03-05 16:43 GMT

தேனி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூரில் சசிகலாவை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி                      அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஓ.ராஜா பெரியகுளத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தான் அவரை நேரில் சந்தித்தேன். தற்போதைய இரட்டை தலைமையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அனைவருக்கும் தெரியும். அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.
நீக்கியது செல்லாது

தற்போது அ.தி.மு.க.வில் கோஷ்டிகளாக உள்ளனர். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. எதிரெதிராக பேட்டி மட்டுமே கொடுக்கின்றனர். சசிகலாவின் தலைமையை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுபற்றி கவலை இல்லை. கட்சியில் இருந்து நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கம் செய்வது நல்லதல்ல. கட்சியே விரைவில் சசிகலா வசம் செல்லப்போகிறது. சசிகலா வரவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள். 2 சதவீதம் எதிர்ப்பு உள்ளது.
எனக்கு பொதுச்செயலாளர் சசிகலா தான். என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. மீண்டும் சசிகலாவை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்