தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-05 18:45 GMT
மயிலாடுதுறை:-

மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி சார்பில் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் முன்னிலை வகித்தார். 

40 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

சமீபத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 940 தபால் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த 40 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கொடுத்து, 900 வேலைவாய்ப்பை வடமாநிலத்தவர்களுக்கு கொடுத்த பணி நியமன ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில் தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட பொருளாளர் சுகுமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுணவேந்தன், ஓய்வு பெற்ற தாசில்தார் ராமகிருஷ்ணன், நிர்வாகி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்