வேடசந்தூர் பகுதியில் இடைநின்ற மாணவர்களை கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் பெண் போலீசார்
வேடசந்தூர் பகுதியில் இடைநின்ற மாணவர்கள் கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் பெண் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணியாற்றி வருபவர் மரியஅன்னபூரணம். இவர் பணி காரணமாக வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்வது வழக்கம். அப்போது பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்லும் குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா என்பதை கேட்டறிந்தார்.
மேலும் அவர்கள் குறித்து மரிய அன்னபூரணம் விசாரித்து, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீட்டுக்கு சென்று அவர்களது பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகிறார். அந்த வகையில், வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆண்டிவேல் மகன் கோகுலகண்ணன் (வயது 16) என்ற மாணவன் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருடன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தான்.
இதையடுத்து அந்த மாணவனுக்கு மரிய அன்னபூரணம் கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி, வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்த்தார்.
இதேபோல் விருதலைப்பட்டியை சேர்ந்த தனசேகரன் மகள் நவரஞ்சனி (14) என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு, தனியார் நூற்பாலைக்கு சென்று வந்தார். இதையடுத்து அவரையும் மீட்டு விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்த்தார்.
மேலும் விருதலைப்பட்டி மக்கள்நகரை சேர்ந்த முனியப்பன் மகன் வீரப்பெருமாள் (11) என்ற மாணவன் பள்ளிக்கு செல்லாமல் பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தான். இதையடுத்து அவனையும் மரிய அன்னபூரணம் மீட்டு விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்தார்.
தொடர்ந்து இதுபோன்று பள்ளி செல்லா மாணவர்களை தேடி கண்டுபிடித்து, பள்ளியில் சேர்த்து வரும் மரிய அன்னபூரணத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.