ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கோவையில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கஞ்சா விற்பனை
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் ஆகியோர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பொது கழிப்பிடம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதில் அவர் சரவணம்பட்டி காந்தி சிலை வீதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது 23) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதேபோல சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் உடையாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சபரி நகரை சேர்ந்த சிவபிரசாத் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.
ஆன்லைன் மூலம் விற்பனை
இவர்கள் 2 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலமாக கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை செய்ததும், மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைத்து கஞ்சாவை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து கைதான 2 பேரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ஸ்டீபன்ராஜ், சிவபிரசாத் ஆகியோரை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.