கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவிலான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மகளிர் குழுக்கள் இணைந்து நடத்திய கண்காட்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார;

Update:2022-03-05 21:33 IST
வாலாஜா

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவிலான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மகளிர் குழுக்கள் இணைந்து நடத்திய கண்காட்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களுக்கு உட்பட்ட மகளிர் குழுக்கள் இணைந்து ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை நடத்தியது. மகளிர் திட்டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து மாணவிகளுடன் கண்காட்சியை பார்வையிட்டார்.
கண்காட்சியில் மகளிர் குழுக்கள் பிரத்தியேகமாக செய்து கொண்டு வந்திருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், பழங்கள், காய்கறிகளையும் பார்வையிட்டார். மகளிர் குழுக்கள் கோலங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திருப்பதையும் அவர் பார்வையிட்டார். 

தீங்கு விளைவிக்கும் உணவு

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:- 
நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானது.

தற்போதைய காலகட்டத்தில் இவை அனைத்தும் மாறி அதற்கு எதிர்மாறான பழக்க வழக்கங்களை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் பல்வேறு உடல் உபாதைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிக அளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இபெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 சரிவிகித சத்துக்கள் தாய்க்கும் சேய்க்கும் கிடைத்து பிரசவத்தின் போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதற்கு ஊட்டச்சத்து உணவுகள் மிகவும் இன்றியமையாதது. நமது முன்னோர்கள் தெரிவித்த பண்டையகால ஊட்டச்சத்து உணவு முறைகளை பெண்கள் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
அதே போன்று இயற்கை உணவுகள் காய்கறி, கீரைகள், பழங்கள் இவைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையை சுண்ணாம்புடன் இணைத்து சாப்பிடும் போது அதில் அதிகப்படியான கால்சியம் நமக்கு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டு தான் முன்னோர்கள் அதனை பின்பற்றினார்கள். ஆனால் தற்போது இதற்கு மாறாக வெற்றிலையுடன் புகையிலையை இணைந்து சாப்பிடுகின்றனர். எந்த நோக்கத்திற்காக நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்களோ அதனை விடுத்து தவறான பழக்க வழக்கத்தை மாற்றிவிட்டனர். 

ஆரோக்கியத்துடன் வளர...

நமது முன்னோர்கள் ஒவ்வொரு உணவு பழக்கத்திலும் உடலுக்கு ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான சத்துக்கள் எவை என்பதை அறிந்து ஒவ்வொரு உணவு பழக்கத்தையும் கடைப்பிடித்தனர். அடுத்த தலைமுறையினர் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கல்லூரி மாணவிகள் இதைப் பார்த்து புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் நானிலதாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ஷாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
==========

மேலும் செய்திகள்